அரசு அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் படுகொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் மர்ம நபர்களால் இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். #ADMK
அரசு அலுவலகத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் படுகொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்
Published on

அணைக்கட்டு:

வேலூர் அடுத்த அணைக்கட்டு தேவிசெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 55). அதி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான மணிமாறன் என்பவருக்கும் தொழில் விரோதம் உள்ளது.

சமுதாய கூடம் கட்டும் டெண்டர் எடுக்கும் தகராறில் கடந்த மார்ச் 21-ந் தேதி இரவு மணிமாறனுக்கும், மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

அப்போது மகேந்திரன், தி.மு.க. பிரமுகர் மணிமாறனை கத்தியால் குத்தினார். பதிலுக்கு மணிமாறனின் ஆதரவாளர்கள் ஆத்திர மடைந்து, அ.தி.மு.க. பிரமுகர் மகேந்திரனை வீடு புகுந்து தாக்கினர்.

இச்சம்பவம் தொடர்பாக, வேப்பங்குப்பம் போலீசார் இருத்தரப்பையும் சேர்ந்த 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சமுதாய கூடம் கட்டுவதற்கான ‘டெண்டர்’ பிரச்சினை மேலும் வலுத்தது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் அணைக்கட்டு ஒன்றிய அலுவலகத்திற்கு அ.தி.மு.க. பிரமுகர் மகேந்திரன் சென்றார். பி.டி.ஓ. இமயவர்மனை சந்தித்து சமுதாய கூடம் கட்டுவதற்கான டெண்டர் தொடர்பாக பேசினார்.

பிறகு, பி.டி.ஓ. அறையில் இருந்து வெளியே வந்த அ.தி.மு.க. பிரமுகர் மகேந்திரனை, 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். கழுத்து, தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே மகேந்திரன் இறந்தார்.

தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தி.மு.க. பிரமுகருடன் இருந்த தொழில் விரோத போட்டியில் மகேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தப்பி ஓடிய 5 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், தேவி செட்டிக்குப்பத்தில் பதட்டம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com