

கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்.அவரது மனைவி துளசிமணி (வயது 70). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 2 மகள்கள் கம்பம் பகுதியில் உள்ளனர். 2 மகள்கள் வெளியூர்களில் குடும்பத்துடன் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு ராஜகோபால் இறந்து போனார். எனவே துளசிமணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரை உள்ளூரில் வசிக்கும் மகள்கள் அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்கள். துளசிமணி கம்பம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராயனின் சகோதரி ஆவார்.
தற்போது துளசிமணி வசிக்கும் தெருவில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தனது தாயார் துளசி மணியை அழைப்பதற்காக உள்ளூரில் உள்ள 2 மகள்களும் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது அங்கு துளசிமணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்ததும் 2 மகள்களும் கதறி துடித்தனர் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கம்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து 2 மகள்களும் போலீசாரிடம் கூறுகையில் எங்களது தாயார் துளசிமணி 4 பவுன் தங்க செயின், காதில் கம்மல் அணிந்திருந்தார். இதனை காணவில்லை என்றனர்.
எனவே நகைக்காக மர்ம நபர்கள் துளசி மணி வீட்டுக்குள் புகுந்து நகையை பறித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கு பதுங்கியுள்ளனர்? என்பது குறித்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.