

உளுந்தூர்பேட்டை:
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று எர்ணாகுளம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கேரளமாநிலம் காயம்புறத்தை சேர்ந்த டிரைவர் சுடர்மணி (வயது 38) ஓட்டி வந்தார்.
அந்த பஸ் நள்ளிரவு 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள சேந்தநாடு குறுக்குசாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் சுடர்மணி உளுந்தூர்பேட்டை பகுதிக்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார்.
இந்த நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென்று ஆம்னிபஸ் மீது மோதியது. இதில் 2 பஸ்களும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் இருந்த பஞ்சர்கடை மற்றும் எடைமேடை மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னிபஸ் டிரைவர் சுடர் மணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள் 8 பேர் படு காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ்சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.