

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், மனிதச்சங்கிலி போன்றவை நடந்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மதுரையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று காலை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் தளபதி, வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் விஜயராஜன் ஆகியோர் தலைமையில் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து பேரணியாக ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து ரெயில் நிலைய நுழைவு வாயிலுக்கு சென்ற போது அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸ்காரர்களுக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட போராட்டக்காரர்கள் பேரிகார்டை அகற்றி உள்ளே புகுந்தனர். மேலும் ரெயில் நிலைய சரக்கு முனைய வாயில், எஸ்கலேட்டர் வழியாக முதல் பிளாட்பாரத்திற்குள் அவர்கள் புகுந்தனர்.
அங்கு நின்று கொண்டிருந்த நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் என்ஜின் மேல் ஏறி மறியலில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தால் ரெயில் புறப்பட தாமதமானது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் ரெயில் மறியல் செய்த 700 பேரை கைது செய்தனர். #CauveryIssue #CauveryManagementBoard