திண்டுக்கல்லில் ரவுடி கொலை: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது

திண்டுக்கல்லில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் என்ற சுள்ளான் ரமேஷ் (வயது 24). இவர் பிள்ளையார் பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் திண்டுக்கல் பாரதிபுரம் கருப்பசாமி கோவில் அருகே அவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் தகராறு காரணமாக மேட்டுப்பட்டி மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த டைசன் வினோ (31), அவரது அண்ணன் ஜான்சன் வினோ (33) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக டைசன் வினோ, ஜான்சன் வினோ உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com