பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் - 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் - 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
Published on

உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒரு மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரியையும், படிப்பையும் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் தலைவிதியை ஒவ்வொரு மதிப்பெண்களும் நிர்ணயிப்பதால் எதிர்பார்த்த மார்க் கிடைக்காத மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை திசை திரும்பி போய் விடுகிறது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண் அளித்ததை ஒவ்வொரு பக்கம் வாரியாக கூட்டல் செய்யும்போது தவறு ஏற்படுகிறது.

இந்த வருடமும் நிறைய மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-

மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம்.

தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறு நடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com