

சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் சோளிங்கநல்லூர், மறைமலைநகர், அம்பத்தூர் எஸ்டேட், கோயம்பேடு பகுதிகளில் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக இந்த பஸ்களின் இயக்கம் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஏசி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பழைய பஸ்களுக்கு பதில் சென்னையில்புதிய பஸ்கள் ஏராளமாக விடப்பட்டு வருவதால் அதில் புதிதாக ஏசி பஸ்களை விட போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஏசி வசதியுடன் கூடிய 50 புதிய பஸ்கள் பல வழித்தடங்களில் விடப்படுகிறது. சோளிங்கநல்லூர், நாவலூர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், மறைமலைநகர், தாம்பரம் மார்க்கத்தில் புதிய ஏசி பஸ்களை இயக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொலைதூர பயணத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் மட்டும் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது குறுகிய தூரமான தாம்பரம் முதல் வேலூர் மற்றும் திருவண்ணாமலை வழித்தடங்களில் குளிர் சாதன பஸ்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 70 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பரிசோதனை அடிப்படையில் திருவான்மியூர்- சென்ட்ரல் இடையே மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கும் வரவேற்பு உள்ளதால், சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 825 மின்சார பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்களுக்கு அதிக பட்சமாக ரூ.50 லட்சம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. அண்மையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடனான ஒப்பந்தத்தில் முதற்கட்டமாக 500 மின்சார பஸ்களும், 2213 புதிய பஸ்களும் வாங்குவதற்காக முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதனால் அனைத்து மின்சார பஸ்களும் ஒரு ஆண்டுக்குள் இயக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.