புதுச்சேரி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் போக்குவரத்து: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதுச்சேரி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் போக்குவரத்து: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

புதுடெல்லி:

திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இரட்டை ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக முடுக்கி விடப்படாமல் இருந்தது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். குறிப்பாக மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலும் இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கும் திட்டங்கள் எடுத்துக்கொள்ளப் படாமலேயே இருந்தன.

மத்தியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்த திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏறக்குறைய ரூ.3,400 கோடி மதிப்புக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. மாநில அரசு இந்த திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை காலதாமதப்படுத்தியதால் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, முழுமையாக மத்திய அரசு நிதியில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.

அதன்படி வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வரை இரட்டை ரெயில் பாதை அமைப்பது மற்றும் மின் மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,272 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையுள்ள 102 கி.மீ. தூரத்துக்கு இரட்டைப்பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,114 கோடியே 62 லட்சமும், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலுமான 86 கி.மீ. தூரத்துக்கு இரட்டைப்பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,552 கோடியே 94 லட்சமும் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிகளை உடனடியாக தொடங்கி, 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டால் போக்குவரத்து இலகுவாக இருக்கும்.

மற்றொரு முக்கியமான திட்டம், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை நான்குவழி சாலை திட்டம். ரூ.10 ஆயிரம் கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து முழுமையாக ஒப்புதல் கிடைக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சாலை அமைந்தால் குறைந்தபட்சம் 60 சதவீத போக்குவரத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அமையும். இந்த வழியில்தான் அனைத்து மத ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டுக்குள் ஒப்புதல் பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது.

இத்துடன் கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டமும் உள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகளை உடனே செயல்படுத்தி முடிக்க ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு உத்தரவிட்டு உள்ளார். இந்த பணிகள் 4 பகுதிகளாக நடைபெறும்.

முதல்பகுதி சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரையிலானது. இதில் புதுச்சேரி பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்த அம்மாநில அரசு கேட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. அடுத்ததாக கடலூரில் இருந்து மயிலாடுதுறை வரையிலான 2-வது பாகத்தில் பணிகள் முடிந்து போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. 3-வது பகுதியாக மயிலாடுதுறையில் இருந்து திருத்துறைபூண்டி, காரைக்குடி, அகஸ்தியம்பள்ளி வரை உடனடியாக ஆய்வை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 4-வது பகுதியாக ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரையுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அடுத்த பட்ஜெட்டில் 4-வது பகுதி சேர்க்கப்பட்டு ஆய்வு நடைபெறும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆய்வுப்பணிகள் முடிவடையும்.

அடுத்ததாக நீர்வழி போக்குவரத்து, திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு நீர்வழி போக்குவரத்து (கப்பல் போக்குவரத்து) நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்ய முன்வந்தார். இதுபற்றி ஏற்கனவே தமிழக அரசிடம் தெரிவித்தாகி விட்டது. தமிழக அரசு இந்த திட்டத்தில் உடனே சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.

மேற்கண்ட 3 திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் சென்னை மற்றும் திருவனந்தபுரத்துடன் முழுமையாக இணைக்கப்படும்.

மேலும், அதிகப்படியான மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற திட்டம் உள்ளது. இதன்மூலம் மாநில அரசு வேறு துறைகளுக்கு அதிக நிதியை ஒதுக்கலாம்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்மாவட்டங்களுக்கு செல்ல நேரமும், எரிபொருளும் மிச்சமாகும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நீட் விவகாரம் தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘தமிழக மாணவர்கள் இனி வருங்காலத்தில் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும், விலக்கு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து விடக்கூடாது’ என்றும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேருவது பற்றி அக்கட்சியின் தலைமையே முடிவு செய்யும் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com