ஜன்தன் வங்கி கணக்கில் 30 கோடி மக்கள் இணைப்பு: ரூ. 65 ஆயிரம் கோடி டெபாசிட் - பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமரின் ஜன்தன் யோஜானா திட்டத்தின்கீழ் 30 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு 65 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜன்தன் வங்கி கணக்கில் 30 கோடி மக்கள் இணைப்பு:  ரூ. 65 ஆயிரம் கோடி டெபாசிட் - பிரதமர் மோடி பெருமிதம்
Published on

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பின்னர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக 2014-ம் ஆண்டில் ‘ஜன்தன் யோஜானா’ எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசின் மானிய உதவிகள் அனைத்தும் இதன் மூலம் மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தக் கணக்கு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் இன்று வானொலி வழியாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜன்தன் யோஜானா திட்டத்தின்கீழ் இதுவரை 30 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு 65 ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய உரையின்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

மனம் நிறைந்த கனவுகளுடன் ஜன்தன் யோஜானா திட்டத்தை நாம் தொடங்கி நாளையுடன் (28-ம் தேதி) மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பிரபல பொருளாதார நிபுணர்களுக்கும் இந்த திட்டம் அப்போது விவாதங்களின் மையப்பொருளாக இருந்தது.

தற்போது இந்த திட்டத்தின்கீழ் 30 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அவர்கள் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது சில நாடுகளில் உள்ள மக்கள்தொகையைவிட அதிகமானது. ஜன்தன் யோஜானா திட்டத்தின்கீழ் அடித்தளத்தில் உள்ள மக்கள் 65 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் செலுத்தியுள்ளனர்.

ஒருவகையில், இந்தப் பணம் ஏழை மக்களின் முதலீடாகவும் அவர்களின் எதிர்காலத்துக்கான அதிகாரம் ஆகவும் உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு தொடங்கிய அனைவருக்கும் காப்பீடு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றாண்டு காலத்துக்குள் சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள கடைசி நபரும் நாட்டின் பொருளாதார மைய நீரூற்றில் இணைந்திருப்பதை எண்ணி நான் மனநிறைவு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com