

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் நசிவடைந்தது. இதனால், பெரும் கடன் சுமைக்கு உள்ளான ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாநிலம் முழுவதும் தற்கொலை செய்து கொண்டனர்.
குறிப்பாக, மராத்வாடா பகுதியில் அதிகமான விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பயிர் கடன் மற்றும் விவசாய கடன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ததுபோல் மகாராஷ்டிரா மாநில அரசும் விவசாய கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் வரும் 12-ம் தேதி தலைநகர் மும்பையில் மாபெரும் பேரணியை நடத்த அகில இந்திய விவசாயிகள சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த பேரணியில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்டத்தில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மும்பையை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 5-ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டனர். நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்த அவர்கள் கைகளில் விவசாய சங்கக் கொடிகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு, முழக்கமிட்டபடி மும்பை நகரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி இந்த ஊர்வலத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.
இதை வைத்துப் பார்க்கும்போது 12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள பேரணியில் பல லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews #farmersrally #Debts #Nashik