முதலமைச்சருக்கான ஆதரவை மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை ரத்தின சபாபதி, கருணாஸ், கலைச்செல்வன் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் தெரிவித்தனர்.
முதலமைச்சருக்கான ஆதரவை மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர்
Published on

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் மிகவும் தீவிரமாக உள்ளார்.

கடந்த மாதம் 22-ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும், தனிதனியாக கடிதம் கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவர் முதல்வராக தொடர ஆதரவு இல்லை என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் கவர்னரை சந்திக்க, புதுச்சேரி சின்னவீராம்பட்டியில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து 16 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 7.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதன்படி கவர்னரை சந்திக்க செல்லும் அணியில் நாகராஜன், விஜிலா சத்யானந்த், செங்குட்டுவன், உதயகுமார், கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன் ஆகிய 7 எம்.பி.க்கள், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், கருணாஸ் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு அவர்களுடன் டி.டி.வி.தினகரன் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார். ஆனால் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுடன் செல்லவில்லை.

12.15 மணிக்கு மற்றவர்கள் கவர்னர் மாளிகை சென்றடைந்தனர். கவர்னர் மாளிகை முன்பு தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடிகளுடன் திரண்டிருந்தனர்.


என்றாலும் டி.டி.வி. தினகரன், 3 எம்.எல்.ஏ., 6 எம்.பி.க்கள் மட்டும் கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டார். கவர்னர் வித்யாசாகர் ராவ், கால்நடை பல்கலைக்கழக விழாவுக்கு சென்றிருந்ததால் அவர்கள் சுமார் 30 நிமிடம் காத்திருந்தனர்.

12.35 மணிக்கு கவர்னர் விழா முடிந்து திரும்பி வந்தார். அதன் பிறகு அவரை டி.டி.வி.தினகரன், 3 எம்.எல்.ஏ., 6 எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது அவர்கள் சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கருணாஸ், கலைச்செல்வன் ஆகிய 3 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com