சேலத்தில் தடையை மீறி இயங்கிய 3 இறைச்சி கடைகளுக்கு சீல் வைப்பு

சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கிய 3 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் 67 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 14 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க சேலத்தில் வாகனங்கள் வந்து செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்குவதற்கு கூட்டமாக இருந்ததாகவும், இதனால் கொரோனா பரவ அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, சேலம் மாநகருக்குள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட தடை விதித்தும், அதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தும் சேலம் மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மீறி இன்று காலை அஸ்தம்பட்டி பகுதியில் இறைச்சிக் கடைகளை திறந்து உரிமையாளர்கள் இறைச்சி விற்பதாகவும், இறைச்சி வாங்க கடைகளின் முன்பு பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன் தலைமையில் அதிகாரிகள் அஸ்தம்பட்டி பகுதிக்கு சென்று, இறைச்சி கடைகளை திறந்திருக்கிறார்களா? என கண்காணித்தனர். அப்போது அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் எதிரே ஒரு இறைச்சி கடை திறந்திருந்தது. அந்த கடையில் இருந்து 35 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது. அப்போது அங்கு கறி வாங்க கூடியிருந்த பொதுமக்கள், அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை கண்டதும் நைசாக அங்கிருந்து நழுவி சென்று விட்டனர்.

இதேபோல் மாநகராட்சி உத்தரவை பொருட்படுத்தாமல் கறிக்கடை உரிமையாளர்கள் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே ஒரு சிக்கன் கடை மற்றும் ஒரு மட்டன் கடையில் இறைச்சி வியாபாரம் செய்தனர். இதையடுத்து கொண்டலாம்பட்டி மண்டல நிர்வாக என்ஜினீயர் லலிதா, உதவி செயற்பொறியாளர் செந்தில், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்த், கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் தாதகாப்பட்டிக்கு சென்று சிக்கன் கடை மற்றும் மட்டன் கடைகளில் சோதனை நடத்தி, 25 கிலோ கோழி இறைச்சி, 7 கிலோ ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து, 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com