திருமங்கலம் அருகே மாணவி காரில் கடத்தல் - 3 பேர் கைது

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து உறவினர்கள் காரில் கடத்தினர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை மீட்டதோடு 3 பேரை கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே மாணவி காரில் கடத்தல் - 3 பேர் கைது
Published on

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கருப்பசாமி (வயது 21). திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பவர் உசிலம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் மகள் சுவாதி (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, காதலனை திருமணம் செய்தார்.

அதன் பிறகு ஊர் திரும்பிய அவர் கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இதனை அறிந்த சுவாதியின் சகோதரர் ரமேஷ் (24), தாய்மாமன் அசோக் (38), அவரது நண்பர் ஜெயபிரகாஷ் (39) ஆகியோர் காரில் நல்லம நாயக்கன்பட்டி வந்தனர்.

அவர்கள் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்து சுவாதியை இழுத்து வந்து காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமியின் தாயார் முத்துலட்சுமி, கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார்.

காரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

டி.விலக்கு பகுதியில் உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியபோது கடத்தல் கார் வந்தது. அதனை மடக்கி சுவாதியை போலீசார் மீட்டனர்.

அவரை கடத்திய ரமேஷ், அசோக், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை கள்ளிக்குடி போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

கைதான அசோக் மதுரை ஜெய்ஹிந்துபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com