2ஜி ஊழல் வழக்கு கடந்து வந்த பாதை

2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்.
2ஜி ஊழல் வழக்கு கடந்து வந்த பாதை
Published on

2007 மே 16: மத்திய தொலை தொடர்பு துறை மந்திரியாக ஆ.ராசா பொறுப்பேற்றார்.

2007 ஆகஸ்ட் 27: 2ஜி அலைக்கற்றைக்கான ஒதுக்கீடு முறையை மத்திய தொலைத்தொடர்பு துறை வழங்கியது.

2007 செப்டம்பர் 25: அலைக்கற்றை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 1-ந்தேதி கடைசி நாள் என்று தொலைத்தொடர்பு துறை அறிவித்தது.

2007 அக்டோபர் 1: 46 நிறுவனங்கள் 575 விண்ணப்பங்களை தாக்கல் செய்தன.

2007 நவம்பர் 2: பிரதமர் மன்மோகன்சிங் ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், “2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டை நேர்மையான முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

2007 நவம்பர் 22: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஏலம் நடந்த சரியான முறையில் நடைபெறவில்லை என மத்திய நிதி அமைச்சகம் கூறியது.

2008 ஜனவரி 10: முதலில் வருபவர்களுக்கே 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கப்படும் என்று தொலை தொடர்பு துறை அறிவித்தது.

2008 பிப்ரவரி: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம், யுனிடெட், டாடா நிறுவனங்கள் அந்த அலைக்கற்றைகளை கூடுதல் விலைக்கு விற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2009 மே 4: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்து இருப்பதாக என்.ஜி.ஒ. நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியது.

2009 ஜூன் 4 : 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

2009 ஜூலை 1 : அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் புதிய முறை கடைபிடித்தது சட்ட விரோதம் என்று டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது.

2009 அக்டோபர் 21: சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

2009 அக்டோபர் 22: மத்திய தொலை தொடர்பு துறை அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

2009 நவம்பர் 16: நீராராடியா பேசிய டேப் வெளியானது. இதையடுத்து வருமான வரித்துறை உதவியை சி.பி.ஐ. நாடியது.

2009 நவம்பர் 20: தொலை தொடர்பு துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் இருப்பதாக வருமான வரித்துறை தகவல் மூலம் தெரிய வந்தது. ஆ.ராசாவிடம் நீரா ராடியா நேரடி தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

2010 மார்ச் 31: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு வெளிப்படையாக நடக்கவில்லை என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்தது.

2010 மே 6: ஆ.ராசா, நீராராடியா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டது.

2010 ஆகஸ்ட் 18: ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2010 செப்டம்பர் 13: அலைக்கற்றை ஏலத்தில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதற்கு ஆ.ராசா 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

2010 செப்டம்பர் 24: ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை சுப்பிரமணியசாமி அணுகினார்.

2010 செப்டம்பர் 27: 2ஜி அலைக்கற்றை உரிமம் முறைகேட்டில் ஆ.ராசாவுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது என்று அமலாக்க துறை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது.

2010 அக்டோபர் : அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைத் துறை கூறி இருப்பதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. மெத்தனமாக நடத்துவதாக சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

2010 நவம்பர் 10: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்தது.

2010 நவம்பர் 11: மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிவிப்பை தொலை தொடர்பு துறை ஏற்க மறுத்தது. ஆ.ராசாவுக்கு நெருக்கடி முற்றியது.

2010 நவம்பர் 15: ஆ.ராசா மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

2011 பிப்ரவரி 10: ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

2011 பிப்ரவரி 17: ஆ.ராசா கைதானார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

2011 பிப்ரவரி 24: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறி இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்தது.

2011 மார்ச் 14: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

2011 மார்ச் 29: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கில் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைதானார்கள்.

2011 ஏப்ரல் 2: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2011 ஏப்ரல் 25: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஊழல் வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2011 மே 20: கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

2011 அக்டோபர் 23: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக 17 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

2011 நவம்பர் 11: சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி சைனி முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியது.

2011 நவம்பர் 28: கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனார்.

2011 டிசம்பர் 12: அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சி.பி.ஐ. 3-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

2012 பிப்ரவரி 2: ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது.

2012 பிப்ரவரி 4: 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க கோர்ட்டு அனுமதி மறுத்தது.

2012 பிப்ரவரி 23: சுப்பிரமணியசாமி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

2014 ஏப்ரல் 25: ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவர் உள்பட 10 பேர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2014 நவம்பர் 10: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீடு வழக்கில் இறுதி விசாரணை தொடங்கியது.

2015 ஜூன் 1: 2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டுக்காக கலைஞர் டி.வி. ரூ.200 கோடி பெற்றதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்தது.

2015 நவம்பர் 3: வழக்கில் இருந்து விடுவிக்க கனிமொழி சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை ஏற்க மறுத்து சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

2017 ஏப்ரல் 19: விசாரணை முடிந்தது.

2017 அக்டோபர் 25: தீர்ப்பு தேதியை நவம்பர் 7-ந்தேதிக்கு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி தள்ளிவைத்தார்.

2017 நவம்பர் 7: தீர்ப்பை தேதியை மீண்டும் ஒத்திவைத்து நீதிபதி சைனி அறிவித்தார்.

2017 டிசம்பர் 5: டிசம்பர் 21-ந்தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி சைனி அறிவித்தார்.

2017 டிசம்பர் 21: 2ஜி வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி சைனி வெளியிட்டார்.

இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழிஉள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com