

புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஷைனி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் கூறியிருந்தது. அதன்பின்னர், 2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 2ஜி வழக்கில் மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா தலைமையிலான வழக்கறிஞர் குழு, விரைவில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு நடைபெற்றபோது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதாடினார். தற்போது அந்த பொறுப்பு துஷார் மேத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் குறித்த அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
துஷார் மேத்தா 2014-ம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு 2008ம் ஆண்டில் இருந்து குஜராத் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews