ஆப்பிரிக்க அகதிகள் படகு மத்திய தரைக்கடலில் மூழ்கியது: 23 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க அகதிகள் படகு மத்திய தரைக்கடலில் மூழ்கியது: 23 பேர் பலி
Published on

ரோம்:

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலர் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர்.

சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் அவர்களில் ஏராளமானோர் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அகதிகள் சிலர் ரப்பர் படகில் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்துள்ளனர். அவர்களது படகு மத்திய தரைக்கடலில் ஸ்பெயின் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது.

அந்த படகில் 300-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் ஸ்பெயின் கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். மீட்புப்பணியில் ஈடுபட்ட அவர்கள் மூழ்கிய படகில் இருந்து 23 பேரை பிணமாக மீட்டனர்.

மேலும் 263 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்கடத்தல் தடுப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

பொதுவாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து மத்திய தரைகடல் வழியாக அகதிகள் புறப்பட்டு வருகின்றனர். ஆனால் துருக்கி மற்றும் கிரீஸ் இடையே வரும் போது கடல் சீற்றத்தால் தண்ணீரில் மூழ்கி பலியாகின்றனர். இதுவரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு வந்ததாகவும் அவர்களில் 2,826 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com