சிரியா: 3 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் பகுதியில் இன்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல்களில் 18 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
சிரியா: 3 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
Published on

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

இந்நிலையில், டமாஸ்கஸ் நகரின் மத்தியில் உள்ள தாஹிர் சதுக்கம் அருகே இன்று காலை சுமார் 6 மணியளவில் தீவிரவாதி ஓட்டி வந்த கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாகவே விமான நிலையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பாதுகாப்பு படையினரின் முகாமை குறிவைத்து வந்த இரு கார் குண்டுகள் வெடித்தன.

தாஹிர் சதுக்கம் அருகே வெடித்த கார்குண்டில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மேற்கண்ட மூன்று தாக்குதல்களிலும் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

தீவிரவாதிகள் இன்று நடத்தியுள்ள இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல் கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் டமாஸ்கஸ் நகரில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com