

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இருதயம், வளைபாதம் மற்றும் காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 குழந்தைகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, காதுவால் நரம்பு உள்வைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு, காது உள்வைப்பு கருவிக்கான உதிரி பாகங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கோயம்புத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டம் அரிசிபாளையம் மற்றும் தாளியூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டநத்தம், நாமக்கல் மாவட்டம் பவர்காடு, நீலகிரி மாவட்டம் கேத்தி, திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆகிய இடங்களில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்; தேனூர்பட்டி, மேலஉளூர் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், புதூர் உத்தமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; என மொத்தம் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தேசிய தரச் சான்றிதழ்களை, ராமநாதபுரம், பெரம்பலூர், கோயம்புத்தூர், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.