16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம்- டெய்லர் கைது

பல்லடம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த டெய்லர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம்- டெய்லர் கைது
Published on

பல்லடம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் சவுந்திரபாண்டி(வயது 27). இவர் கடந்த 3 வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து சின்னக்கரையில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். 

இந்தநிலையில் சவுந்திரபாண்டிக்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்த சமயத்தில் சவுந்திரபாண்டி திருமணம் செய்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.

பின்னர் கடந்த 2 மாங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டி ஊருக்கு சென்றார். மீண்டும் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி மயங்கி கீழே விழுந்தார். அவரை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் சவுந்திரபாண்டியுடன் பழகியதால் கர்ப்பமானதாக கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சவுந்திரபாண்டியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் சிறுமியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் ஊருக்கு சென்ற சவுந்திரபாண்டி சிறுமியிடம் பழகியதை மறைத்து கடந்த 9-ந் தேதி உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சவுந்திரபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com