

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் திம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்கு இடையூறாக இருந்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. 3 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமிக்கு, வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே ஆண் குழந்தை பிறந்தது.
பெரம்பலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் நடைபெற்ற டி.என்.ஏ. சோதனையில் அந்த குழந்தை மணிகண்டனின் குழந்தை என தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மணிகண்டனின் தாய் கருப்பாயி, சகோதரி அஞ்சலை, உறவினர் ஆறுமுகம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.