புதுவை சொகுசு விடுதியில் இருந்து தினகரன் ஆதரவு 10 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் பரபரப்பு

புதுவை சொகுசு விடுதியில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை சொகுசு விடுதியில் இருந்து தினகரன் ஆதரவு 10 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் பரபரப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி- ஓ.பி.எஸ். அணிகள் இணைந்த பின்னர் மோதல் முற்றியது. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தினகரன் தண்ணி காட்டி வருகிறார்.

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது நீக்கி விட வேண்டும் என்று தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

புதுவை சொகுசு விடுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தங்கியுள்ள அவர்கள் அடுத்தக் கட்டமாக என்ன செய்யப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் அரசியல் விளையாட்டை மறந்து அங்குள்ள பூங்காவில் எம்.எல்.ஏ.க்கள் சறுக்கு விளையாட தொடங்கினர்.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராக பேட்டி அளித்துக் கொண்டே இருந்தனர்.

புதுவை விடுதியில் 19 பேர் வரை தங்கி இருந்த நிலையில், 10 பேர் வெளியேறி விட்டனர். நேற்று முன்தினம் சொகுசு விடுதிக்கு சென்ற தினகரன் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அதன் பின்னரே விடுதியில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினார்கள்.

தற்போது 9 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே விடுதியில் தங்கி உள்ளனர். இப்படி விடுதியில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.க்களில் சிலர் எடப்பாடி பழனிசாமி அணியில் போய் சேரப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது போன்ற ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி, நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இதில் கலந்து கொள்வதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com