நகச்சுத்தி ஏன் வருகிறது? வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?!

சமையல் அல்லது துணி துவைக்கும் வேலைகளில் நீண்ட நேரம் ஈடுபடுபவர்களுக்கு நகச்சுத்தி ஏற்படும்
Whitlow - நகச்சுத்தி
Published on

நம்மில் பலருக்கும் கை விரல் அல்லது கால் விரல் நகங்களின் ஓரங்களில் திடீரென வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலி மற்றும் சீழ் பிடிக்கும். இதனை 'நகச்சுத்தி' என்று அழைப்பார்கள்.

இது ஏன் ஏற்படுகிறது, இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

Whitlow - நகச்சுத்தி

நகச்சுத்தி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

நகச்சுத்தி என்பது பொதுவாக பாக்டீரியா அல்லது ஹெர்பெஸ் கிருமித் தொற்றுகளால் நகக்கண்களில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும்.

கைகளில் இருக்கும் நகங்களை வாயால் கடிக்கும் போது, எச்சிலில் உள்ள கிருமிகள் நகத்தின் ஓரங்களில் உள்ள சிறிய வெடிப்புகளுக்குள் நுழைந்து தொற்றை ஏற்படுத்துகின்றன.

கைகள் அல்லது கால்களை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருப்பது, சமையல் அல்லது துணி துவைக்கும் வேலைகளில் நீண்ட நேரம் ஈடுபடுபவர்களுக்குக் கிருமித் தொற்று எளிதாக ஏற்படும்.

நகங்களை ஓரங்களில் மிகவும் ஆழமாக அல்லது கூர்மையாக வெட்டும்போது, அங்குள்ள சதைப்பகுதி காயமடைந்து கிருமிகள் உள்ளே செல்ல வழிவகுக்கிறது.

ஊசி குத்துவது, முள் குத்துவது அல்லது நகத்தின் ஓரத்தில் உள்ள தோலை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவது போன்றவற்றால் நகச்சுத்தி ஏற்படும்.

Whitlow - நகச்சுத்தி

நகச்சுத்தியின் அறிகுறிகள் என்ன?

நகத்தைச் சுற்றியுள்ள தோல் பகுதி திடீரென சிவந்து வீங்குதல். விரலை அசைக்க முடியாத அளவிற்குத் துடிதுடிக்கும் கடுமையான வலி ஏற்படுதல்.

பாதிப்பு தீவிரமடையும் போது, நகத்தின் ஓரத்தில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சீழ் கோர்த்துக் கொள்ளுதல். சிலருக்கு விரலில் உள்ள நரம்புகள் வழியே வலி கை முழுவதும் பரவுவதுடன், லேசான காய்ச்சல் ஏற்பட்டால் நகச்சுத்தி வருவதற்கான அறிகுறிகள்.

Whitlow - நகச்சுத்தி

எளிய வீட்டு வைத்திய முறைகள்:

நகச்சுத்தி ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், வீடுகளில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இதனைக் குணப்படுத்த முடியும். நகச்சுத்தி வந்த விரலில் ஒரு எலுமிச்சம்பழத்தைக் குடைந்து, அந்தப் பழத்திற்குள் விரலைச் சொருகி வைப்பது பாரம்பரியமான மற்றும் சிறந்த வழியாகும்.

இதில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து, பாதிக்கப்பட்ட விரலை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

இது வீக்கத்தைக் குறைக்கும். சிறிதளவு சுத்தமான மஞ்சள் தூளுடன் விளக்கெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் கலந்து, அதை லேசாகச் சூடாக்கி நகச்சுத்தி உள்ள இடத்தில் தடவி வரலாம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினியாகும்.

Whitlow - நகச்சுத்தி

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

நகச்சுத்தி ஏற்பட்டு 2 அல்லது 3 நாட்களுக்கு மேலாகியும் வலி குறையாமல், சீழ் அதிகமாகி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வீட்டு வைத்தியம் செய்வதைத் தவிர்த்து, ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது நல்லது. நகச்சுத்தியை நாமே ஊசியால் குத்தி சீழை எடுக்க முயலக் கூடாது; அது தொற்றை மேலும் அதிகமாக்கிவிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com