

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பவன் கல்யாண், மற்றொரு முன்னணி இயக்குநரான திரிவிக்ரம் சீனிவாஸ் ஆகியோரின் கூட்டணியில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான படம் ‘அஞ்ஞாதவாசி’.
இந்த படத்தில் பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல், ஆதி, பொமன் இரானி, குஷ்பூ, வெண்ணிலா கிஷோர், ஆடுகளம் நரேன், சம்பத்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் நடிகர் வெங்கடேசும் நடித்திருக்கிறார். அத்துடன் இப்படத்திற்கு இசையமைத்ததுடன் ஒரேயொரு பாடல் காட்சியிலும் தோன்றி நடித்திருக்கிறார் அனிருத். இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு ஆளாகியிருக்கிறது இந்த அஞ்ஞாதவாசி.
சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி பத்தாம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த படத்தினைக் காண உலகம் முழுவதுமுள்ள பவன் கல்யாணின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, இப்படம் தென்னாப்பிரிக்காவில் வெளியாக சூழல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து திரையுலகில் விசாரிக்கும் போது, ‘தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களுக்கு தென்னாப்பிரிக்காவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் அங்கு திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள், எந்தவொரு படத்திற்கும் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு தான் திரைப்படத்தினை விற்பனை செய்யவேண்டும் என்ற நிர்பந்திக்கிறார்கள்.
அத்துடன் அவர்கள் படத்திற்காக நிர்ணயிக்கும் தொகையும் படத்தின் சந்தை மதிப்பிற்கும், வசூலுக்கும் முரணானதாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு படத்தின் சந்தை மதிப்பு பத்து ரூபாய் என்றால், அவர்கள் அதனை இரண்டு ரூபாய்க்கு தான் விலையை நிர்ணயிக்கிறார்கள். இதனை எதிர்த்து அங்கு யாராலும் சொந்தமாகவோ அல்லது வேறு யாருடனோ படத்தை நேரடியாக திரையரங்கில் திரையிட முடியாது.
அவர்களின் இந்த ஏதேச்சதிகார, ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு தமிழில் சில படங்களும் பலியாகி இருக்கிறது. இது போன்றதொரு நிலைமை தான் பவன் கல்யாண் நடிப்பில் உருவான ‘அஞ்ஞாதவாசி’க்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பவன் கல்யாணின் ரசிகர்கள் அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறார்கள்’ என்கிறார்கள்.