இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ இசை நிகழ்ச்சி, சென்னையில் கடந்த பிப்ரவரி அன்று விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்றது
இந்த விழாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் வருகிற அக்டோபர் மாதம் மலேசியாவில் பிரம்மாண்டமான இசை நிகழ்சியாக கொண்டாட இருக்கின்றனர்.
கௌதம் வாசுதேவ் மேனனின் திரையுலகப் பயணத்துடன் இணைந்த மறக்க முடியாத இசை, கதைகள் மற்றும் இனிய நினைவுகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது.
திரைப்படங்கள், மெட்டுக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நினைவுகள் வழியாக ஒரு இசைப் பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒன்றா ரெண்டா, கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை ஒரு தனித்துவமான அனுபவமாக ரசிகர்களுக்கு அளிக்கவுள்ளது.
கோலாலம்பூரில் நடைப்பெற இருக்கும் நிகழ்ச்சியில் முன்னணி மற்றும் பிரபல பாடகர்களான கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளாஸ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா ஆகியோர் நேரலையில் பங்கேற்று, கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இடம்பெற்ற ரசிகர்களின் விருப்பமான பாடல்களை மீண்டும் உயிர்ப்பிக்கவுள்ளனர்.
மேலும், திறமையான இசைக்கலைஞர்களான கேபா ஜெரமையா, லலித் தல்லூரி, மனோஜ் குமார், கீத் பீட்டர்ஸ் மற்றும் புவனேஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து தங்களது இசைத் திறமையாலும் நேரடி இசை நிகழ்ச்சியின் ஆற்றலாலும் இந்தக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கவுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கிய நிலையில், கோலாலம்பூர் நிகழ்ச்சியையும் அதே உற்சாகத்துடனும் பிரம்மாண்டத்துடனும் சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.