ஜன நாயகன்- திரை விமர்சனம்

ஜன நாயகன்- திரை விமர்சனம்

அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் இனிமை. குறிப்பாக, தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.
Published on
ஜன நாயகன்- திரை விமர்சனம்(3.5 / 5)

கதை

ஒரு கொலை வழக்கில் சிறை தண்டனை கைதியாக இருக்கிறார் நாயகன் விஜய். அந்த சிறையில் உள்ள ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க போலியான ஜெயில் கலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள். நாயகன் அதை முறியடிப்பதால் போலீஸ் அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நாயகன் மேல் நல் அபிப்ராயம் ஏற்படுகிறது. இதனால் நாயகனக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். ஒரு விபத்திலும் இறந்து போகிறார்.

கௌதம் மேனனின் விருப்பப்படி அவரது மகளான மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்த்து விட துடிக்கிறார் விஜய். அவருக்கு தொடர் பயிற்சிகள் அளித்து அவரை ராணுவத்தில் சேர்த்து விட முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இன்னொரு புறம் ஆப்பிரிக்காவில் பல கொலைகளை அரங்கேற்றி அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இந்திய கடற்படையை தாக்கி இந்தியாவுக்குள் நுழைகிறார்.

இந்த சூழலில் பாபி தியோலுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் மமிதா பைஜூவை, கொலை செய்ய பாபி தியோல் முடிவு செய்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் விஜய்.

மமிதா பைஜூவுக்கு பாதுகாவலராக இருக்கும் விஜய் பற்றி தெரிந்து பாபி தியோல் அதிர்கிறார். விஜய்யை பழி தீர்க்கத் துடிக்கிறார்.

பாபி தியோல் யார்? அவரது பின்னணி என்ன? விஜய்க்கும், அவருக்கும் உண்டான மோதல் என்ன? இந்தியாவில் அவர் செய்யத் துடிக்கும் சதி திட்டம் என்ன? இதை விஜய் முறியடித்தாரா, இல்லையா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

நடிகர்கள்

ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ளார் விஜய். ஆக்ரோஷமாகட்டும் மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார். நடனத்திலும் தான் மாஸ் என்பதை காட்டியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி.

ஜெயில் அதிகாரியாக கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது சிறப்பு.

அழகான கதாநாயகியாக வந்து போகிறார் பூஜா ஹெக்டே. காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். துறுதுறு நடிப்பால் கவர்கிறார் மமிதா பைஜூ.

வில்லத்தனத்தில் பாபி தியோல் மிரட்டுகிறார். பிரியாமணி, சுனில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், கஜராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குநர் எச்.வினோத், முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து ஒரு கமர்ஷியல் விருந்தை படைத்திருக்கிறார். ஆக்‌ஷன், குடும்ப பாசம், தேசப்பற்று, சமூக கருத்து ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதை வழக்கமான கமர்ஷியல் பாதையில் சென்றாலும், மாஸ் தருணங்கள் அதை மறக்கச் செய்கின்றன.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் பிரம்மாண்டமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் காட்சியமைப்பில் மிகப்பெரிய பலமாக அமைகின்றன.

இசை

அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் இனிமை. குறிப்பாக, தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.

விறுவிறுப்பான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

பலம்

விஜய்யின் மாஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பு பாபி தியோலின் வில்லத்தனம், அனிருத் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு, குடும்ப பாசம் கலந்த திரைக்கதை.

பலவீனம்

சில காட்சிகளில் யூகிக்கக்கூடிய திரைக்கதை, வழக்கமான கமர்ஷியல் சினிமா அம்சங்கள் அதிகம்.

மொத்தத்தில்...

‘ஜனநாயகன்’ விஜய் ரசிகர்களுக்கு முழுமையான மாஸ் விருந்தாகவும், குடும்ப ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படமாகவும் அமைந்துள்ளது. ஆக்‌ஷன், உணர்வு, தேசப்பற்று, அனிருத் இசை, விஜய்யின் திரை ஆளுமை ஆகியவை சேர்ந்து கொண்டாட்டம் மிகுந்த படமாக உருவாகியுள்ளது.

தளபதி பட்டைய கிளப்பிவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com