

பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இந்த தீபாவளித் திருநாளில் தன்னுடன் இணைந்து, புளூ க்ராஸ் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதியுதவி செய்து, ஆதரவற்ற நாய்களின் உணவுக்கு ஸ்பான்சர் செய்யுமாறு அவர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை திரிஷா, சமூக வலைதளங்களில் எப்போதுமே விலங்குகள் நலன் சார்ந்த விழிப்புணர்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
வழக்கமாக பண்டிகைகள் என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் கொண்டாட்டங்கள் என்று பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலையில், இந்த தீபாவளியை ஆதரவற்ற விலங்குகளுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார் திரிஷா. விலங்குகள் நல அமைப்பான 'புளூ க்ராஸ் ஆப் இந்தியா'வுடன் இணைந்து அவர் இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ள செய்தியில், "இந்த தீபாவளிக்கு நான் ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்யப் போகிறேன். மீட்கப்பட்ட ஆதரவற்ற நாய் ஒன்றின் உணவுக்கு நான் ஸ்பான்சர் செய்கிறேன். வெறும் 1,000 ரூபாய் இருந்தால், மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுமைக்கும் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது அவற்றுக்கு 30 நாட்களின் வயிற்றுப்பசியைத் தீர்த்து மகிழ்ச்சியான தருணங்களைத் தரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இந்த தீபாவளித் திருநாளில் தன்னுடன் இணைந்து, புளூ க்ராஸ் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதியுதவி செய்து, ஆதரவற்ற நாய்களின் உணவுக்கு ஸ்பான்சர் செய்யுமாறு அவர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகைக் கொண்டாட்டங்களின் நடுவே ஆதரவற்ற விலங்குகளின் பசியைப் போக்க வேண்டும் என்ற நடிகை திரிஷாவின் இந்த சமூக நோக்கம் கொண்ட சிந்தனைக்கு சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.