

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவரது அடுத்த படைப்பாக ஜெயில் மேட்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது
தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் கே.பி. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார்.
மேலும், மவுனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலையும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற்றும் இயக்குநர் திரைவண்ணன் ஒரு பாடலையும் எழுதியுள்ளனர்.
அறிமுகப் பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணா ஒரு பாடலை எழுதியுள்ளார். மறைந்த தேனிசைத் தென்றல் தேவா கடைசியாகப் பாடிய மனதை உருக்கும் ஆன்மீகப் பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பசங்க புரொடக்ஷன்ஸ், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. முழுப் படமும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இயக்குநர் கே.பி.ஜெகனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.