நான் அமீர்கானின் தீவிர ரசிகன் - உதயநிதி அதிரடி பேச்சு

இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

 லால் சிங் சத்தா 

 இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை தவிர்த்துவிட்டு அமீர்கானின் 'ரங்கீலா' படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர்கானின் ரசிகன்.

 லால் சிங் சத்தா 

'லால் சிங் சத்தா' திரைப்படத்தினை தமிழில் வெளியிடுவதற்கு முதலில் நாங்கள் மறுத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, 'லால் சிங் சத்தா' படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன்.

அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com