சசிகுமாரின் புதிய படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார் SK

சார்த்தக் கல்யாணி இசையமைக்க, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சசிகுமார்
Published on: 
Summary

சசிகுமார் நடிப்பில், இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'டெத் இரயில்வே' படத்தின் டைட்டில் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'யாத்திசை' படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்திற்கு 'டெத் இரயில்வே' (Death Railway) என தலைப்பிடப்பட்டு அதன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ராணுவ அதிகாரி

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்த அறியப்படாத வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகர் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, கிஷோர், அசோக் செல்வன், பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலக்கண்ணன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சார்த்தக் கல்யாணி இசையமைக்க, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் வெளியாவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X