"அவன் விஷால் மாதிரியே இருக்கான்!"-ஆர்யா உடைத்த 'அவன் இவன்' படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

விஷாலின் 'ஸ்க்விண்ட் ஐ' நடிப்பு மற்றும் ஆர்யாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
secret of avan evan movie
Published on

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'அவன் இவன்'. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, சுமார் 40 நாட்கள் எடுக்கப்பட்ட காட்சிகளை இயக்குநர் பாலா முற்றிலுமாக நீக்கிவிட்டு , மீண்டும் முதன்முதலில் இருந்து படப்பிடிப்பைத் தொடங்கிய அதிர்ச்சிப் பின்னணியை நடிகர் ஆர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

'அவன் இவன்' படத்தின் தொடக்கக் கட்டத்தில், ஆர்யாவுக்கு வேறு சில திரைப்படக் கமிட்மெண்ட்கள் இருந்ததால், விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்க பாலா முடிவு செய்தார். அதன்படி 40 நாட்கள் வரை படப்பிடிப்பும் நடைபெற்றது.

ஆர்யா பின்னர் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றபோது, அங்கு விஷால் இல்லை. இதுகுறித்து பாலாவிடம் கேட்டபோது, "இத்தனை நாட்கள் எடுத்த காட்சிகளில் விஷால் பார்ப்பதற்கு 'விஷால்' போலவே இருக்கிறார், கதாபாத்திரமாக மாறவில்லை. அதனால் அவருடைய பல் மற்றும் கண் அமைப்பை மாற்றுவதற்காக சென்னைக்கு அனுப்பியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

40 நாட்கள் உழைப்பு மற்றும் எடுக்கப்பட்ட Footage என்ன ஆனது என்று ஆர்யா கேட்க, பாலா ஒரு புன்னகையுடன் அதை முழுமையாக நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார். கதாபாத்திரத்தின் கச்சிதத் தன்மைக்காக 40 நாள் உழைப்பை பாலா தூக்கி எறிந்தது ஆர்யாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'நான் கடவுள்' படத்திற்குப் பிறகு பாலா தனது அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகர்கள் கதையை ஆர்யாவிடம் கூறியுள்ளார். மற்றொரு நாயகனைத் தேடிக் கொண்டிருந்தபோது, நடிகர் விஷாலின் பிறந்தநாள் பார்ட்டியில் ஆர்யா இந்த கதையைப் பற்றி விஷாலிடம் பேச, அவர் உடனடியாக சம்மதித்துள்ளார். ஆர்யா உடனே பாலாவுக்கு கால் செய்து, நகைச்சுவையாக "ஒருத்தன் சிக்கிட்டான்" என்று கூறியதாக அந்தப் பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'அவன் இவன்' திரைப்படத்தில் ஆர்யா, விஷாலுடன் இணைந்து ஜி.எம். குமார், ஆர்.கே, மது ஷாலினி, ஜனனி ஐயர் மற்றும் அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஷாலின் 'ஸ்க்விண்ட் ஐ' நடிப்பு மற்றும் ஆர்யாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று, திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com