Panjayathupatti

பஞ்சாயத்துப்பட்டி- திரை விமர்சனம்

ஒளிப்பதிவில் கிராமத்து வீதிகளையும், மனிதர்களையும் செயற்கைத்தனம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் மோகன் தாஸ்.
Published on: 
பஞ்சாயத்துப்பட்டி- விமர்சனம்(2.5 / 5)

கதை

பஞ்சாயத்துப்பட்டி கிராமத்து நாட்டாமைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. கருப்பாக இருக்கும் குழந்தைக்கு அமாவாசை என்றும், கலராக இருக்கும் குழந்தைக்கு பவுர்ணமி என்றும் பெயர் சூட்டுகிறார்.

யார் முதலில் பிறந்தார்கள் என்பது தெரியாததால், இருவரையும் பஞ்சாயத்து தலைவர்களாக்குகிறார். இதனால் பாதி நாட்கள் அமாவாசையும், மீதி நாட்கள் பவுர்ணமியும் நாட்டாமையாகப் பொறுப்பேற்கின்றனர்.

இந்த ஊரில் காதலுக்குக் கடும் எதிர்ப்பு இருக்க, ஜெய், வினோஸ்ரீயை காதலித்துத் திருமணம் செய்கிறார்.

இதனால் கோபமடையும் அமாவாசை நாட்டாமை, அவர்களது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார். இந்தப் பிரச்சினையில் தலையிடும் கதாநாயகனின் நண்பன் கண்ணனிடம், கில்லி போட்டியில் வென்றால் மட்டுமே அவர்களை ஊருக்குள் சேர்த்துக்கொள்வதாகச் சவால் விடுகிறார் அமாவாசை. அந்தச் சவாலில் வென்றது யார்? காதல் ஜோடி மீண்டும் ஊருக்குள் வந்ததா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

ஜெய், வினோஸ்ரீ இடையிலான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நண்பர்களாக வரும் ஸ்பேனர் பாண்டி, நட்டு போல்ட், கண்ணன் ஆகியோர் நகைச்சுவைக் காட்சிகளில் கலகலப்பூட்டுகின்றனர்.

பவுர்ணமி நாட்டாமையாக வரும் கேசவன் தனது அலப்பறைகளால் சிரிக்க வைக்கிறார். அமாவாசை நாட்டாமையாக வரும் பிரபாகரன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வசனங்கள் பேசாமல் உடல்மொழியால் சிரிக்க வைக்கும் ரங்கனும் கவனம் ஈர்க்கிறார். பார்வையற்ற தந்தையாக வருபவரும் தனது நடிப்பால் மனதில் நிற்கிறார்.

இயக்கம்

கிராமத்து மனிதர்கள், அவர்களது பேச்சுவழக்கு, பழக்கவழக்கங்கள், அதிகாரப் போட்டி என அனைத்தையும் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மோகன் தாஸ்.

சில காட்சிகளில் திரைக்கதையின் வேகம் குறைவது படத்தின் பலவீனம். குறைந்த பட்ஜெட் காரணமாகத் தொழில்நுட்பத் தரத்திலும் சில குறைகள் தெரிகின்றன.

கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, காதல், நகைச்சுவை, பஞ்சாயத்து மோதல் என எளிமையான அம்சங்களுடன் ரசிக்க வைக்கும் ‘பஞ்சாயத்துப்பட்டி’.

இசை

திவாகர், ராஜிவ் ஆகியோரின் இசை கதையின் ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது. எளிமையான பாடல்களும் படத்துக்கு இதம் சேர்க்கின்றன.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவில் கிராமத்து வீதிகளையும், மனிதர்களையும் செயற்கைத்தனம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் மோகன் தாஸ்.

X

Maalai Malar
www.maalaimalar.com