

நடிகர் மணிகண்டன் மற்றும் மிஷ்கின் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கையில் தொடங்கியது. மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, புதிய இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் உருவாகும் இப்படம், மிஷ்கினின் நடிப்பும், புதுமையான கதையம்சமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் கதைகளின் நாயகனாக தனக்கென தனிமுத்திரையைப் பதித்து வரும் நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் ஒரு முக்கியமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இப்படத்தின் பெரும்பகுதி சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.
'குட் நைட்', 'லவ்வர்' மற்றும் 'குடும்பஸ்தன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மணிகண்டன் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிக்கிறார். மிஷ்கினின் நடிப்பு மற்றும் புதிய இயக்குநரின் புதுமையான பார்வை ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.