நிஜ வாழ்வில் கேப்டனாக மாறிய மம்மூட்டி!

விசாரிப்பதை விட, அவை நடப்பதற்கு முன்பே தடுப்பது மிகவும் முக்கியம்
மம்மூட்டி
Published on: 
Summary

கேரளாவில் இணையவழி குற்றங்களை தடுக்கும் திட்டத்தில் மம்மூட்டி பங்காற்றவுள்ளார்.

கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்த வி.டி. சதீஷன் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பங்கேற்புடன் 'கிளிக்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இந்தத் திட்டத்தின் ஊக்குவிப்பாளராகவும் 'சைபர் செக்யூரிட்டி கேப்டனாகவும்' நியமிக்கப்பட்டுள்ளார்.

'கிளிக்' திட்டம்

'கிளிக் - சைபர் குற்றங்களை எதிர்க்கும் கேரளாவிற்கான சமூகத்தால் வழிநடத்தப்படும் முயற்சி' என்ற திட்டத்தை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இணையவழி குற்றங்கள் நடந்த பிறகு அவற்றை விசாரிப்பதை விட, அவை நடப்பதற்கு முன்பே தடுப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மாநிலத்தில் இணையவழி மோசடிகள் தொடர்பாக 54,000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்குள் கேரளாவை முழுமையாக இணையத் தாக்குதல்களை தடுக்கும் திறன் கொண்ட மாநிலமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

மம்மூட்டி

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மம்மூட்டி, இணையக் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் தலைவர்களாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தொழில்நுட்பத்தை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்துவது என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது, "குழந்தைகள் அழும்போது அல்லது தவறாக நடந்துகொள்ளும்போது அவர்களை அமைதிப்படுத்த ஸ்மார்ட்போன்களை கொடுப்பது நல்ல யோசனையல்ல.

மொபைல் போன்களை பொறுப்புடன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் முதிர்ச்சியடையும் வரை, அவர்களுக்கு பட்டன் போன்களை கொடுப்பதே சிறந்தது," என்று யோசனை தெரிவித்துள்ளார்.

இணையக் குற்றங்களை கண்டறிந்து கையாள்வதற்கான திறனை சமூகம் அதிகரிக்க வேண்டும் என்றும் 'கிளிக்' திட்டம் ஒரு முக்கியமான படி என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு 'கிளிக் கேப்டன்' தொப்பிகளை அவர் வழங்கினார்.

X