மலையாள திரைப்பட இயக்குனர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளனர்.பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
மலையாள திரைப்பட இயக்குனர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு
Published on

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஹேமா கமிட்டி அறிக்கையால் அம்பலமானது. இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மேலும் ஒரு இயக்குனர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் மலையாள திரைப்பட இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகியோரின் மீது மரடு போலீஸ் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னை விஜித் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு இயக்குனர் சுரேஷ் திருவல்லா வற்புறுத்தியதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளனர். மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், ஏற்கனவே பல வழக்குகளை விசாரித்து வருகின்றனர். அவர்களே இந்த வழக்கையும் விசாரிக்க உள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் மலையாளத்தில் சில படங்களை இயக்கியிருப்பது மட்டுமின்றி, சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com