அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடனும், ரசிகர்களுடனும் கலந்துரையாடினார் ஆர்.ஜே. பாலாஜி. அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா?" என்று மேடையை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி தனது வழக்கமான பாணியில் வெளிப்படையாக பதிலளித்தார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணையாளர் என்று தனது திறமையை பல்வேறு விதமாக நிரூபித்தவர் ஆர். ஜே பாலாஜி. சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்த கருப்பு படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவிற்கும் நல்ல ஒரு கம்பேக் ஆக இருந்தது. இந்த படம் ரூ.300 கோடி வசூலித்து திரைத்துறையை கலக்கியது.
தற்போது ஆர். ஜே பாலாஜி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற செய்தியும், சிறப்பான கதை ஒன்றை எழுதி வருகிறார் என்ற செய்தியும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
நீங்கள் நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வருவீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டதும் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி, "ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியலில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியவில்லையா? இன்னும் நிறைய பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வளவு பேர் இருக்கும் போது, நானும் அந்தப் பெரிய கூட்டத்தில் போய் இணைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" எனப் பொதுமக்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசியலுக்கு நான் வர வேண்டுமா? தேவையே இல்லை! நோ, ரிஜெக்டட்! நான் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன், எனக்கு அந்த அசையும் இல்லை. அது நடக்கவும் நடக்காது" என்று மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறி தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி கதை எழுதி, கதாநாயகனாக நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ஒரு மாபெரும் அரசியல் கிண்டல் படமாக வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது.
நிஜ அரசியல்வாதிகளின் தேர்தல் உத்திகளை அப்படியே திரையில் காட்டியதால், பாலாஜிக்கு நிஜ வாழ்க்கையிலும் அரசியல் ஆசை இருக்குமோ என்ற விவாதம் தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்து வந்தது. தற்போதைய அவரது இந்த வெளிப்படையான பேச்சு, அந்த விவாதங்களுக்குப் பதிலடியாக அமைந்துள்ளது.