

500க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதைகள் மற்றும் ஆவணங்கள் CBFC இணையத்தில் இருந்து கசிந்துள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திலிருந்து (CBFC) 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதைகள் மற்றும் ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
திரைப்படங்களுக்கான தணிக்கை அனுமதிக்கு தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கும் 'இ-சினிப்ரமான்' என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கசிந்துள்ளன.
கசிந்த தகவல்களில் படங்களின் முழுமையான பிரதிகள் இல்லை என்றாலும், அவை தொடர்பான மிகவும் ரகசியமான ஆவணங்கள் அதில் உள்ளன.
இவற்றில், படங்களின் திரைக்கதைகள், கதாபாத்திர விவரங்கள், படத்தில் இருந்து எந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்தால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் திரையரங்கு வெளியீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட பிற முக்கிய ஆவணங்கள் அடங்கும்.
இந்த தகவல்கள் வெளியீட்டிற்கு முன்பே கசிவது, தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியான இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சில நாட்களாக 'இன்டர்நெட் ஆர்க்கைவ்' என்ற இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இன்டர்நெட் ஆர்க்கைவ் நிர்வாகம் உடனடியாக தங்கள் தளத்திலிருந்து அந்தத் தகவல்களை முழுமையாக நீக்கியது.
இந்த விவகாரம் இணையப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தரவுக் கசிவுச் சம்பவம் குறித்து தணிக்கை வாரியம் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, தங்கள் இணையதளத்தில் முழுமையான பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.