

காந்தாரா படத்தின் நடித்து புகழ்பெற்ற நடிகை ருக்மணி வசந்தின் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஆட்சேபனைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரப்பியது தொடர்பாக, பெங்களூரு நகர சைபர் குற்ற பிரிவு காவல் நிலையத்தால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆட்சேபனைக்குரிய தரவு, தன்னை இழிவான முறையில் சித்தரிக்கும் நோக்கத்துடன் சமூக ஊடக தளங்களில் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி ருக்மிணி வசந்த் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களும் காணொளிகளும் நடிகையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், அவரது தனியுரிமையை மீறியதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், பொதுமக்களிடையே அவரை தவறாக சித்தரித்ததாகவும் குற்றம்சாட்டி அவர் புகார் அளித்தார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்ற எண் 36/2026 பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பிய குற்றவாளிகளை கண்டறிய ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.