காளிதாஸ் 2– திரைவிமர்சனம்

காளிதாஸ் 2– திரைவிமர்சனம்

ஒரு சாதாரண காணாமல் போன வழக்கை பல அடுக்குகளுடன் கூடிய கிரைம் திரில்லராக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.
Published on
காளிதாஸ் 2– விமர்சனம்(3.5 / 5)

புறநகர் சென்னையில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென காணாமல் போகிறாள்.

வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி பரத், ஆரம்ப விசாரணையிலேயே அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்கிறார். ஆனால், உறுதியான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்படுகிறார். இதற்கிடையில் காணாமல் போன குழந்தை சடலமாக கிடைப்பதும், அதே குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் இறப்பதும் வழக்கை இன்னும் சிக்கலாக்குகிறது.

இறுதியில் இந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?குற்றவாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் பரத், மிக நிதானமான மற்றும் அளவான நடிப்பின் மூலம் கதையை தாங்கிச் செல்கிறார். ஓவராக எந்த கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல், அனுபவம் வாய்ந்த அதிகாரி போல விசாரணையை அணுகும் விதம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. சந்தேக நபராக வரும் அஜய் கார்த்தி, அதிக வசனங்கள் இல்லாமலேயே முகபாவனைகளால் கவனம் ஈர்க்கிறார். படம் முழுவதும் அவரைச் சுற்றியே ஒரு சந்தேக நிழல் உருவாகும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.

பவானி ஸ்ரீ, அதிரடி குணம் கொண்ட அதிகாரியாக வந்து, ஆரம்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், பின்னர் ஏற்படும் சிக்கல்களில் திணறும் கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறார். சங்கீதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருந்தாலும், குறைந்த காட்சிகளிலேயே திரைக்கதையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். பிரகாஷ் ராஜ், கிஷோர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள், தங்களது பணியை சிறப்பாக செய்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.

இயக்கம்

ஒரு சாதாரண காணாமல் போன வழக்கை பல அடுக்குகளுடன் கூடிய கிரைம் திரில்லராக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில். ஒவ்வொரு கட்டத்திலும் புதிய திருப்பங்கள், யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை கடைசி வரை ஈர்த்து நிறுத்துகிறார். காவல்துறையின் செயல்முறை, விசாரணையின் நுட்பம் போன்றவற்றையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலம்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, அடுக்குமாடி குடியிருப்பை மையமாக வைத்து காட்சிகளை அமைத்திருந்தாலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் பதட்டத்தை உருவாக்கும் விதமாக காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

இசை

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படம் முழுவதும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com