டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் உலக அரங்கில் ஒலித்த இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’

நிகழ்ச்சியின் போது அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
kagitha malar team
Published on: 

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த உலக திரையிடலில் படத்தின் தயாரிப்பாளர் பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கைதட்டல்கள் ஒலித்தன:

திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன.

திரையிடலுக்கு பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குத் தமிழில் பிரேமா செழியனும், ஆங்கிலத்தில் அதிதா செழியனும் பதிலளித்தனர். நிகழ்ச்சியின் போது அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

பாராட்டி ரசித்தனர்:

‘காகித மலர்’ திரைப்படம் குறித்து விழாவின் தேர்வுக் குழு உறுப்பினர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தெரிவித்த பாராட்டுகளும் கருத்துகளும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வு குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா கூறும் போது:

"டிஜிட்டல் யுகத்தில் குறைந்த பட்ஜெட்டில்கூட மிக சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும். திரைப்பட உலகில் ரத்தினங்களை போன்ற அருமையான படைப்புகளை நாங்கள் கண்டிருக்கிறோம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் செழியனின் 'காகித மலர்'. இந்த திரைப்படம் உலக தரத்தை கொண்ட படைப்பாக அமைந்துள்ளது.

பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பலரும் பாலிவுட் திரைப்படங்களைத்தான் நினைக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டைத் தாண்டியும் இந்தியாவில் பல்வேறு வகையான தனித்துவமான திரைப்படங்கள் உருவாகின்றன என்பதை உலக ரசிகர்களுக்குக் காட்டவே இந்த படத்தை தேர்வு செய்தோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை போலவே, இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்ததுடன், மிகவும் பாராட்டி ரசித்தனர்," என்றார்.

செழியனின் ‘காகித மலர்’ திரைப்படம் இனி பல்வேறு உலக நாடுகளிலும் தனது பயணத்தைத் தொடரவுள்ளது.

X