

கே. பாக்யராஜ் 1953-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் கிருஷ்ணசாமி பாக்யராஜ்.
ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார்.
1977-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே'வில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை தொடங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரெயில்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு, கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் நடித்து இருந்தார்.
பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார். தனது நான்காவது படமான 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.
கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் சுதாகர், சுமதி நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் அதில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். பாக்யராஜை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் பிரபல தயாரிப்பாளரான கேஆர்ஜி அவர்களின் சகோதரர் கோபிநாத்.
ராஜேஷ் அறிமுகமான 'கன்னிப்பருவத்திலே' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்த இவர், ஒரு கை ஓசை’ என்கிற படத்தின் மூலம் தயரிப்பாளராகவும் உயர்ந்தார். இவரே இயக்கிய இந்தத் திரைப்படத்தில் ஊமையாக நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்
அடுத்து இவர் இயக்கிய 'மௌன கீதங்கள்' 'இன்று போய் நாளை வா' படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என இவரது படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குருநாதர் பாரதிராஜாவுடன் இணைந்து இவர் பணியாற்றிய படம் ஒரு கைதியின் டைரி. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.
ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார். ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யராஜ் இயக்கிய முதல் இந்திப் படம்.
பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் இவரது கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார்.
வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி - பதில் என பல புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
'புதிய வார்ப்புகள்' படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், 'தாய்க்குலமே தாய்க்குலமே' படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், 'ஒரு கை ஓசை' படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார்.
பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பலமுறை பெற்றுள்ள கலைஞர் இவர்.
தமிழ்த் திரையின் கதாநாயகர்கள் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்த வீட்டு வாலிபன் போன்ற தோற்றத்தில் தனது இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் பாக்யராஜ்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து பாதியில் நின்று போன திரைப்படமான அண்ணா நீ என் தெய்வம் திரைப்படத்தில் எம்.ஜி. ஆர். நடித்திருந்த காட்சிகளை வைத்துக்கொண்டு அதற்கு புதிய திரைக்கதை எழுதி "அவசர போலீஸ் - 100" என்ற பெயரில் அந்த படத்தை வெளியிட்டது பாக்யராஜின் தனித்திறமை.
இவர் உதவி இயக்குநராக இருந்தபோது இவருக்கு உதவியவர் பிரவீணா என்ற நடிகை. அப்போது முதலே இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருந்தது. கதாசிரியராக அறிமுகமாகி இயக்குநராக உயர்ந்து வெற்றிகரமான கதாநாயகன் என்ற இடத்தைப் பிடித்த பிறகு, 1981-ம் ஆண்டில் பிரவீணாவை மணந்து காதலுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தவர் இவர்.
"இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" போன்ற பலபடங்களில் இவருடன் நடித்த பிரவீணா, மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983-ம் ஆண்டில் மறைந்தார்.
இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து நண்பர்கள் வற்புறுத்தியதை் தட்ட முடியாமல் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்த பாக்யராஜ், அப்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவரும் இவரோடு 'டார்லிங் டார்லிங்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.
தனது மகள் சரண்யாவை 'பாரிஜாதம்' என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதாநாயகியாக இவர் அறிமுகம் செய்தார். சரண்யா 'பாரிஜாதம்' படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு "சக்கரக்கட்டி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
திரையுலக நியதிக்கேற்ப கதாநாயகன் என்ற நிலையிலிருந்து ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் "திரைக்கதையின் மன்னன்" என்று போற்றப்படுகிறார். நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர். இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும்.
இயக்குநர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, குடும்பக் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் இன்று வரை ரசிகர்களால் மதிக்கப்படும் முக்கியமான திரைப்பட ஆளுமையாகத் திகழ்கிறார்.