தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் கிருத்தி ஷெட்டி, தனது பேஷன் ஆர்வம், சினிமா கனவுகள் மற்றும் தனிப்பட்ட ரசனைகள் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
"எனக்கு சிறுவயதிலிருந்தே பேஷன் மீது தனி ஈடுபாடு உண்டு. அதற்கு முக்கிய காரணம் என் அம்மா ஏனென்றால் அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர். அதனால் என் வாழ்வில் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷனின் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
எனக்கு பாரம்பரிய ஆடைகளான புடவைகள் என்றால் அவ்வளவு விருப்பம். அதை நான் விரும்பி அணிவேன். பல நேரங்களில் என் அம்மாவிடம் ‘உங்களுடைய புடவைகளையும், நகைகளையும் எனக்கு இரவல் தர முடியுமா?’ என்று கேட்டு வாங்கி அணிந்து மகிழ்வேன்" என்று கூறினார்.
திரையுலகில் தனது லட்சிய கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், "ஒரு போர்க்கள வீராங்கனை அல்லது இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
குறிப்பாக, 'பாகுபலி' திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த 'தேவசேனா' போன்ற கம்பீரமான கதாபாத்திரம் தான் எப்போதும் என்னுடைய கனவு கதாபாத்திரம்" எனத் தெரிவித்தார்.
படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "வீட்டில் இருக்கும் போது எனது 4 மாத நாய் குட்டியுடன் தான் பெரும்பாலான நேரத்தை விளையாடிக் கழிப்பேன்.
இது தவிர, எனக்கு நடனம் மற்றும் தற்காப்பு கலைகள் மிகவும் பிடிக்கும். ஏற்கனவே பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி கற்றுக்கொண்டுள்ளேன். தற்போது கூடுதலாக 'கதகளி' நடனமும் கற்று வருகிறேன்" என்றார்.
தனக்கு பிடித்தமான நடிகைகள் குறித்துப் பகிர்ந்த கிருத்தி ஷெட்டி, "நான் எப்போதும் மறைந்த புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் ஒரு மிக அற்புதமான மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
திரையுலகில் அவருக்கு நிகர் யாருமே இல்லை என்று நான் உண்மையாகவே நினைக்கிறேன். அவரைப் போலவே நான் வியந்து போற்றும் மற்றொரு சிறந்த நடிகை மாதுரி தீட்சித்" என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.