டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்- விமர்சனம் (3 / 5)
கதை
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் பகத் பாசில் சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்தநிலையில் பிரபல கடத்தல் மன்னன் மகேஷ் மஞ்ச்ரேக்கருடன் ஏற்படும் பிரச்சினையால், 3 நாட்களுக்குள் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்.
பணத்துக்காக பகத் பாசில் எடுக்கும் தவறான முடிவுகள், எதிர்பாராத வகையில் அவரை ஒரு மாய உலகத்துக்குள் அழைத்துச் செல்கின்றன. அப்போது அவருக்கு ஒரு மேஜிக் லாக்கெட் கிடைக்கிறது. அதிலிருந்து பேபி சாரா வெளிப்படுகிறாள்.
அந்த சிறுமி பகத் பாசிலுக்குமட்டுமே தெரிகிறாள். காணாமல்போன தனது பெற்றோரை கண்டுபிடித்துத் தருமாறு பகத் பாசிலிடம் அவள் கேட்கிறாள். அந்த சிறுமியின் மாய சக்தியை வைத்து பணம் சம்பாதிக்க சூரி முயற்சிப்பதுதான் படத்தின் சுவாரசியமான கதை.
நடிகர்கள்
பகத் பாசில் வழக்கம்போல தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தின் அவசரம், குழப்பம், பேராசை, பின்னர் உருவாகும் பாசம் என ஒவ்வொரு கட்டத்தையும் தனது நடிப்பால் அழகாக கடத்துகிறார்.
பேபி திவ்யாவாக வரும் சாரா படத்தில் மாயாஜால காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். பல காட்சிகளில் பகத்தை விட இவர்தான் திரையை ஆக்கிரமிக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸில் அவரது நடிப்பு படத்திற்கு நல்ல எமோஷனல் தாக்கத்தை கொடுக்கிறது.
அஸ்லாம் கதாபாத்திரத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர், போலீஸ் அதிகாரியாக சுப்பராஜு, பகத்தின் நண்பராக வெங்கடேஷ் ககுமானு ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
இயக்குநர் ஷசாங்க், மாயாஜாலம் மற்றும் மனித உணர்வுகளை இணைத்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் கதை வேகம் சற்று குறைந்தாலும், ஹீரோ–சிறுமி உறவை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.
மாயாஜாலம், காமெடி, சென்டிமென்ட் என பல அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், குறிப்பாக குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஹீரோவுக்கும் சிறுமிக்கும் இடையே உருவாகும் உறவு படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது.
இசை
கால பைரவாவின் இசை பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும், சில இடங்களில் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
ஒளிப்பதிவு
கேமரா ஒர்க் படத்தின் இன்னொரு பலம்.
மொத்தத்தில், வழக்கமான கதைகளில் இருந்து விலகி மாயாஜாலம், காமெடி, சென்டிமென்ட் என வித்தியாசமான கலவையில் உருவாக்கப்பட்டிருக்கிறது டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்.

