டெலிவரி பாய்- விமர்சனம்(2.5 / 5)
கதை
காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லியோ சிவகுமார் குடும்பத்தின் சூழல் கருதி டெலிவரி பாய் ஆக வேலை செய்து வருகிறார்.
இதற்கிடையில் தனது தாயார் ராதிகா சரத்குமார் உடல்நிலை குறைவால் அவதிப்பட, அவரது உயிரை காப்பாற்றுவதற்காக துஷ்யந்திடம் பணத்தை திருடுகிறார்.
ஒருகட்டத்தில் ராதிகா உடல் நலம் தேறிவிட, துஷ்யந்திடம் திருடிய பணத்தை அவரிடமே ஒப்படைக்க முடிவு செய்கிறார் லியோ சிவகுமார்.
அப்போதுதான் துஷ்யந்த் உயிருக்கு சிலரால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார். தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்கு காரணமாக இருந்த துஷ்யந்தை ஆபத்திலிருந்து மீட்க முடிவு செய்கிறார்.
துஷ்யந்தை கொல்ல துடிக்கும் கும்பலின் பின்னணி என்ன? அவரை லியோ சிவகுமார் காப்பாற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.
நடிகர்கள்
உணர்ச்சிகரமான நடிப்பால் படம் முழுக்க கவனிக்க வைக்கிறார் லியோ சிவகுமார். முந்தைய படங்களை ஒப்பிடுகையில் காதல், எமோஷனல் காட்சிகளில் நன்றாக தேறி விட்டார்.
ராதிகா சரத்குமார் வழக்கம்போல நடிப்பில் 'ஸ்கோர்' செய்துவிட்டார். கதாநாயகி என்ற போர்வையில் வந்து போகிறார் பிரிகிடா. அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை குறைவின்றி செய்து கொடுத்திருக்கிறார்கள்.
கொடூரமான குற்றங்களை செய்யும் நண்பர்களாக நடித்திருக்கும் இளைஞர்களும் பொருத்தமான தேர்வு.
இயக்கம்
வழக்கமான கதைக்களம் என்றாலும் அதில் புதுமையான காட்சிகளை புகுத்தி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் நானி. பரபரப்பான ஆக்சன் காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாதியை இன்னும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம். காதல் காட்சிகள் ஒட்டவில்லை. திரைக்கதையில் நேர்த்தி தேவை.
ஒளிப்பதிவு
அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல்.
இசை
சுந்தரமூர்த்தி இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது.

