எதிர்கால திரைப்பட இயக்குநர்களை மூளைச்சலவை செய்யும் பாஜக - சத்யஜித் ரே திரைப்பட கல்லூரி சர்ச்சையில் நசிருதீன் ஷா கருத்து

அக்டோபர் 12 முதல் துணைவேந்தர் சந்தோஷ் அஜ்மேராவின் அலுவலகத்திற்கு வெளியே காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நசிருதீன் ஷா
Published on: 
Summary

SRFTI மாணவர்கள் போராட்டத்திற்கு நசிருதீன் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்

கொல்கத்தாவின் சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தில் (SRFTI) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் மூத்த நடிகர் நசிருதீன் ஷா குரல் எழுப்பியுள்ளார்.

தாக்குதல்கள்

செப்டம்பர் 27 அன்று, கல்லூரியில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்களைத் தாக்கியதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

பின்னர் அக்டோபர் 4 அன்று, பங்கிய இந்து ஜாகரன் மன்ச் அமைப்பின் உறுப்பினர்கள் கல்லூரிக்கு வெளியே கூடியபோது மற்றொரு மோதல் ஏற்பட்டது.

போராட்டம்

SRFTI மாணவர்கள் அக்டோபர் 12 முதல் துணைவேந்தர் சந்தோஷ் அஜ்மேராவின் அலுவலகத்திற்கு வெளியே காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வளாகத்தில் நடந்த 2 வன்முறை சம்பவங்களின்போது தங்களை பாதுகாக்க கல்வி நிறுவனம் தவறியதாகவும், மாறாக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோருகின்றனர் .

நசிருதீன் ஷா

இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில் நசிருதீன் ஷா, பாஜக அதன் நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுடன் உடன்படாத மக்கள் மீது பழிவாங்குவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நாட்டின் எதிர்கால திரைப்பட இயக்குநர்களுக்கு மூளைச்சலவை செய்ய அல்லது அவர்களை அச்சுறுத்த பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார்

அது நடக்காது என்று கூறிய அவர், மாணவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

SRFTI நவம்பர் 13 வரை வகுப்புகளை இடைநிறுத்தியதுடன், வளாகத்தில் தங்கியுள்ள மாணவர்களை விடுதிகளைக் காலி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. அனால் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.

முன்னதாக ஊழியர்களை தாக்கியதாகவும் துணை வேந்தர் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, நிர்வாகம் அக்டோபர் 15 அன்று 6 மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியது. இந்தக் குற்றச்சாட்டுகளை மாணவர் சங்கம் மறுத்துள்ளது.

பாயல் கபாடியா

இதனிடையே மாணவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நடிகை பாயல் கபாடியாவும் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com