

தமிழ்த் திரையுலகில் மண் வாசனை மாறாத திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனிப்பாதையை போட்டு பயணித்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரது மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது திரைப்படங்கள் மூலமாக தென் மாவட்ட கிராம மக்களின் உடல் மொழியை அப்படியே கேமராவுக்குள் அடைத்து பெரியத் திரையில் பிரமிப்பாக விரித்துக் காட்டிய பாரதிராஜா. தமிழ்த் திரை உலகில் உயரிய இடத்தை பிடிப்பதற்குள் கடுமையான போராட்டங்களை சந்தித்து உள்ளார்.
குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்த பாரதிராஜா அதன் காரணமாகவே சின்னசாமி என்கிற தனது பெயரை பாரதிராஜாவாக மாற்றிக் கொண்டார். தங்கை பாரதி, தம்பி ஜெயராஜ் ஆகியோரது பெயர்களை சேர்த்து பாரதிராஜாவாக திரையுலகில் நுழைந்த அவர், இயக்குனர்களின் ராஜாவாகவே திகழ்ந்தார் என்று கூறினால், அது மிகையாகாது. ‘16 வயதினிலே’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த பாரதிராஜா கிராமத்து மண், மனம் சார்ந்த படங்களுடன் அதிரடியான திகில் படங்களையும் இயக்கி இருக்கிறார். இருப்பினும் பாரதிராஜா என்றவுடன், நம் எல்லோர் மனதிலும் தோன்றுவது அவரது கிராமம் சார்ந்த மண்வாசனை படங்கள் தான். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வியலை முழுமையாக அவர் படம்பிடித்து காட்டியிருப்பார். இப்படி, கிராமிய படங்களை அதிகமாக இயக்கி இருந்தாலும் பாரதிராஜாவுக்குள் ஆடைகளாக ஜீன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டுகளுமே இருந்துள்ளன.
இதனால் பலர் கிராமத்து படங்களை இயக்கி பாரதிராஜா பெயர் பெற்றிருந்தாலும் அவரும் முழுமையாக நகரவாசியாக ஆகிவிட்டாரோ என்றே நினைத்திருப்பார்கள். ஆனால் பாரதிராஜாவோ தலைநகரான சென்னையில் குடியேறிய போதும் தனது சொந்தப் பந்தங்கள் உறவு முறைகளை மறக்காமலேயே இருந்து வந்தார்.
அடிக்கடி ஊருக்கு செல்லும் அவர் உற்றார் உறவினர்களோடு அமர்ந்து உணவருந்துவது, நீண்ட நேரம் பழைய நினைவுகளை அசைப்போட்டபடி உரையாடுவது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்து உள்ளார். இதுவே அவரது மரணத்திற்கு பிறகும் சொந்த ஊரில் துயில் கொள்ள வேண்டும் என்கிற உணர்வை பாரதிராஜாவுக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக தனது மகள் ஜனனியிடம் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனது மகன் மனோஜ் மரணமடைந்த பிறகு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாரதிராஜா கடுமையாக பாதிக்கப்பட்டார். மகன் மீதான பாசம் அவரை போதும் இந்த வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளிவிட்டதாகவே அவரது நண்பர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனியின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட உடனே தனது மகள் ஜனனியிடம் பாரதிராஜா தனது கடைசி ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
அம்மா... நான் இறந்த பிறகு என்னை சென்னையில் அடக்கம் செய்துவிட வேண்டாம். சொந்த ஊரில் தான் நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனவே தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பண்ணை தோட்டத்தில்தான் எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நான் பிறந்த மண்ணில் என்னை அடக்கம் செய்தால் தான் என் தாய் மடியில் உறங்குவது போன்ற உணர்வு ஏற்படும் எனவும் பாரதிராஜா மகள் ஜனனியிடம் மிகவும் உருக்கமாக கூறியிருக்கிறார்.
இதனை கேட்டதும் ஏன் அப்பா... இப்போதே இப்படி சொல்கிறீர்கள்? எல்லாம் உங்கள் ஆசைப்படி தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படியே தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
பாரதிராஜாவின் உடல் சொந்தஊருக்கு கொண்டு செல்லப்பட்டதும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பண்ணை வீட்டில் முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக ஒரு பாதையும், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. காலையிலேயே பாரதிராஜாவின் உடலுக்கு டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவின் நீண்ட கால நண்பரான வைரமுத்து, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி, நடிகர்கள் வடிவேலு, கருணாஸ், விக்னேஷ், சின்னத்திரை நடிகை தீபா, டைரக்டர் ராம், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி. ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் திரண்டு பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஏராளமான திரைக் கலைஞர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தேனி அருகே உள்ள சோலைத்தேவன் பட்டி கிராமத்தில் டைரக்டர் சுசி கணேசனின் இயக்கத்தில் ஒரண்டை படத்துக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த படத்தில் நடித்த நடிகர் சிங்கம்புலி, முத்துக்குமார், ராமச்சந்திரன் ஆகியோரும் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
படப்பிடிப்பு தளத்திலும் பாரதிராஜா படத்துக்கு அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் தங்கை பாரதி தனது சகோதரர் மறைவு குறித்து கண்ணீருடன் கூறுகையில், சிறு வயது முதலே குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவராக பாரதிராஜா இருந்தார். பல வெற்றிப்படங்களை கொடுக்கும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தியேட்டரில் படம் பார்க்கும் போதும் எனது சகோதரரை பற்றி பெருமையாக மக்கள் பேசும் போதும் பூரிப்படைவோம். சென்னையில் இருந்து அவர் சொந்த ஊருக்கு வரும் போது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி விடுவோம். தற்போது அவரது மறைவு எங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றார்.
பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா, திண்டுக்கல் எஸ்.பி. பிரதீப் உள்ளிட்டோர் பாரதி ராஜா உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பண்ணை வீடு அமைந்துள்ள பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவரது உடலுக்கு தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணிக்கு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
இளம் வயதில் சென்னைக்கு வந்து இயக்குனராகி சென்னையிலேயே குடியேறிய திரைப்பிரபலங்கள் உடல் அவர்களது மரணத்திற்கு பிறகு சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணை மறக்காமல் தனது மரணத்திற்கு பிறகு சொந்த ஊரிலேயே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்கிற அவரது ஆசையை மகள் நிறைவேற்றி இருப்பதன் மூலம் தனது வாழ்க்கையை எங்கு தொடங்கினாரோ அங்கே பாரதிராஜா நீண்ட துயில் கொள்கிறார்.