‘வேட்ட சாமி’யாக அருள்நிதி: கருப்பு அவதாரத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கி கவனத்தைப் பெற்ற எம்.செல்வகுமார் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
Arulnithi
Published on

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குநரும் நடிகருமான அமீர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘வேட்ட சாமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2023-ல் வெளியான ‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கி கவனத்தைப் பெற்ற எம்.செல்வகுமார் இத்திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் கிராமிய வாழ்வியல் மற்றும் சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட பாரம்பரிய காவல் தெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சாதி, மத எல்லைகளைத் தாண்டி தலைமுறைகளாகத் தொடரும் சமூகப் பிரச்சனைகளையும், அதனால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களையும் ஆக்‌ஷன் மற்றும் ஆன்மிக உணர்வுகளுடன் இணைத்து ஒரு அழுத்தமான கதையாக இயக்குநர் செல்வகுமார் உருவாக்கியுள்ளார். வழக்கமான கதாநாயகி வழி சினிமா பாணியை விடுத்து, கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படம் செதுக்கப்பட்டுள்ளது.

கருப்பு அவதாரத்தில் அருள்நிதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து வெளியிட்டுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருள்நிதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமான பார்வையுடன், சாமி வந்து ஆவேசமாக ஆடும் கருப்பு அவதாரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். போஸ்டரின் பின்னணியில் பிரம்மாண்டமான சாமி சிலையும், கிராமியக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. வில்லிசைக் கலைஞர் மாதவியின் குரலில் தொடங்கும் கிளிம்ப்ஸ் வீடியோவில், அருள்நிதி மற்றும் அமீரின் அழுத்தமான கதாபாத்திர அறிமுகங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன.

இப்படத்தில் அருள்நிதி மற்றும் அமீருடன் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவுப் பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com