சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடுவராகக் களம் இறங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!

விருப்பமுள்ள பாடகர்கள் ‘சோனி லிவ்’ செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து ஆடிஷனில் கலந்துகொள்ளலாம்.
 A.R.Rahman
Published on

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதல்முறையாக ஒரு தொலைக்காட்சி இசை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகப் பொறுப்பேற்க உள்ளார்.

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி

இந்திய அளவில் முன்னணித் தொலைக்காட்சியாக விளங்கும் ‘சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா’, தமிழ் பொழுதுபோக்குத் துறையில் கால்பதிக்கும் வகையில் ‘சோனி விழா’ என்ற புதிய பொதுப் பொழுதுபோக்கு சேனலை அக்டோபர் 2026-இல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது. தமிழ் கலாச்சாரம், உணர்வுகள் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இச்சேனலின் நிகழ்ச்சிகள் அமையவுள்ளன.

‘தமிழ் ஐடல்’ இசைத் தேடல்

உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘இந்தியன் ஐடல்’ பாணியில், தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மறைந்திருக்கும் குரல் வளங்களைக் கண்டறியும் வகையில் ‘தமிழ் ஐடல்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இணையவழிப் பதிவுகள் ’ஆகஸ்ட் 18’ முதல் தொடங்குகின்றன. விருப்பமுள்ள பாடகர்கள் ‘சோனி லிவ்’ செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து ஆடிஷனில் கலந்துகொள்ளலாம்.

புதிய திறமைகளைத் தேடி

இச்சேனலின் நடுவராகப் பொறுப்பேற்பது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "இசையின் உண்மையான நோக்கமே புதிய குரல்களைக் கண்டறிவதுதான். அந்தப் புதிய குரல்களே கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைச் சென்றடைகின்றன. தமிழ் ஐடல் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் சிறந்த குரல்களை உலகிற்கு அடையாளம் காட்டவுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரையில் முன்னணி

சோனி விழா சேனல் அறிமுகத்தை முன்னிட்டு முன்னணித் திரைநட்சத்திரங்கள் இதில் இணைந்து வருகின்றனர். நடிகை சமந்தா, சர்வதேச அளவில் பிரபலமான ‘மாஸ்டர் செப்’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் சோனி விழா தொலைக்காட்சியிலும், சோனி லிவ் ஓடிடி தளத்திலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com