

அப்போலோ நிர்வாகம் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உபாசனா காமினேனி கொனிடெலாவை Director – Projects பொறுப்பில் நியமித்துள்ளது.
அப்போலோ குழுமத்தின் தலைமை நிர்வாகம், மருத்துவக் குழுக்கள் மற்றும் திட்டப் பங்குதாரர்களுடன் இணைந்து, இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவமனைத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் பணிகளில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான பகுதிகளில் ஒரே மாதிரியான வடிவமைப்புத் தர நிலைகளை உருவாக்குதல் ஆகியவை அவரது முக்கியப் பொறுப்புகளாக இருக்கும்.
மேலும், மருத்துவமனைகளில் தெளிவான வழிகாட்டிப் பலகைகள், எளிதான வழிகள், திறமையான மருத்துவப் பிரிவுகளின் அமைப்பு மற்றும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வசதியான அனுபவத்தை வழங்கும் வகையிலான வடிவமைப்பு ஆகியவற்றிலும் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
அப்போலோ மருத்துவமனைகளின் தற்போதைய விரிவாக்கத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு சுமார் ரூ.8,600 கோடி ஆகும். இதில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சுமார் ரூ.1,565 கோடி மதிப்பிலான Brownfield Expansion Projects அடங்கும்.
நாட்டின் முக்கிய நகரங்களில் அப்போலோவின் மருத்துவச் சேவைத் திறனை அதிகரிப்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகளில் புதிய மருத்துவமனைகளை அமைப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
வெளியிடப்பட்டுள்ள திட்ட விவரங்களின்படி, ஹைதராபாத், டெல்லி NCR, சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும், லக்னோ, வாரணாசி, இந்தோர், குவாஹாத்தி மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
உபாசனாவின் நேரடிப் பொறுப்பின் கீழ் வரும் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான பட்ஜெட் விவரங்கள் அப்போலோ மருத்துவமனைகளால் பின்னர் உறுதி செய்யப்படும்.