

தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் இன்று வெளியானது.
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் திரைப்பயணத்திற்கு மகுடம் சூட்டும் படமாகவும், அவரது இறுதித் திரைப்படமாகவும் வெளியாகும் இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய இரவே சென்னை நகரம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டது.
இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். இரவு நேரம் என்பதையே மறக்கடிக்கும் வகையில் ரசிகர்களின் ஆரவாரம், மேளதாளங்கள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு திருவிழா சூழல் நிலவியது.
அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திரைப்பயணத்தை 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் நிறைவு செய்கிறார் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர்.
இதனிடையே, தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.
1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவான 'மீனவ நண்பன்' (1977 அக்டோபர்) மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (1978) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
அதேபோல், தற்போதைய தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.