மொத ராத்திரி திரைப்படத்தை மிகவும் ரசித்தேன் - நடிகர் சிலம்பரசன்

ஒரு தமிழ்ப் படம் வெளியாகையில் அதற்கும் நாம் அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும்.
Modha Rathiri Poster and STR
Published on

நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியான "மொத ராத்திரி" திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் "மொத ராத்திரி".

புதிதாக திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் சிலம்பரசன் பாராட்டு:

இந்த நிலையில், மண் மணத்தோடு கூடிய ஒரு சுவாரஸ்யமான படைப்பு என கூறி "மொத ராத்திரி" திரைப்படத்தை நடிகர் சிலம்பரசன் பாராட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மொத ராத்திரி படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன்.

பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களை கண்டறிந்து நாம் கொண்டாடுகிறோம். அதேபோல, ஒரு புதிய குழுவுடன் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகையில் அதற்கும் நாம் அதே அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஒரே இரவில் நடக்கும் கதை:

ஒரு கிராமத்து திருமண பின்னணியை கொண்டு, ஒரே இரவில் நடக்கும் கதை. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. கதைகளம், நகைச்சுவை, மனிதர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருந்தன.

ஒரு புதிய இயக்குநரும் அவரின் குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்; இவர்களுடன், இப்படத்துக்கு துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

என் ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; "மொத ராத்திரி" திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள். முழு படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com